மத்திய மந்திரி பதவி வேண்டாம் என நான் கூறவில்லை - சுரேஷ் கோபி விளக்கம்

தனக்கு மத்திய மந்திரி பொறுப்பு வேண்டாம் என சுரேஷ் கோபி கூறியதாக செய்திகள் பரவின.

Update: 2024-06-10 10:15 GMT

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி, 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலமாக கேரளாவில் தனது முதல் வெற்றிக் கணக்கை பா.ஜனதா தொடங்கியது. சுரேஷ் கோபியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் கே. முரளீதரன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

கேரளாவின் முதல் பா.ஜனதா எம்.பியான சுரேஷ் கோபிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுரேஷ் கோபி மந்திரியாக பொறுப்பேற்றார்.

இதற்கிடையே, தனக்கு மத்திய மந்திரி பொறுப்பு வேண்டாம் எனவும், தான் எம்.பியாகவே பணி செய்ய விரும்புகிறேன் என்றும் சுரேஷ் கோபி கூறியதாக தகவல் வெளியானது. கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதால் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தது.

இந்த நிலையில், மத்திய மந்திரி பதவி வேண்டாம் என தான் கூறவில்லை என சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"மோடி அரசின் அமைச்சர்கள் குழுவில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. அமைச்சரவையில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. மோடி அமைச்சரவையில் கேரள மக்களின் பிரதிநிதியாக நான் இருப்பது எனக்கு பெருமையே. பிரதமர் மோடியின் தலைமையில், கேரளாவிற்கு தேவையான வளர்ச்சி மற்றும் செழுமையை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்