என்னை சிக்கவைக்க சதி ; முன்னாள் மந்திரி பார்த்தா சாட்டர்ஜி வேதனை

அமலாக்க துறையின் காவலில் இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி இன்று மருத்துவ பரிசோதனைக்காக நகரின் தெற்கு புறநகரில் உள்ள ஜோகாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Update: 2022-07-29 11:21 GMT

கொல்கத்தா

மேற்குவங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69). இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள பார்த்தாவின் வீட்டில் கடந்த 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதை தொடர்ந்து பெல்ஹச்ஷியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்தாவின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அர்பிதா பானர்ஜியின் வீட்டில் 21.90 கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜியையும், அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத்துறையினர் கடந்த 23-ம் தேதி கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்து பார்த்தா சாட்டர்ஜியை மந்திரி பதவியில் இருந்தும் கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், பெல்கஞ்யா பகுதியில் உள்ள அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணமும், நகையும் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் பல பெரிய பைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பைகளில் செங்கல் அமைப்பில் பல பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை திறந்து பார்த்தபோது அதில் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக இருந்தன.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 50 லட்ச ரூபாய் பார்சலாகவும், 500 ரூபாய் நோட்டு 20 லட்ச ரூபாய் பார்சலாகவும் கட்டப்பட்டு பல பார்சல்கள் இருந்தன. அந்த வீட்டில் நடந்த சோதனையில் மொத்தம் 27 கோடியே 90 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

பின்னர், அந்த வீட்டில் இருந்த ஒரு லாக்கர் அறையை திறந்தபோது அங்கு தலா ஒரு கிலோ எடைகொண்ட 3 தங்க கட்டிகள் (3 கிலோ), தலா 1/2 கிலோ (அரை கிலோ) எடைகொண்ட 6 தங்க காப்புகள் (கை காப்புகள்) (3 கிலோ), தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் ஆன பேனா ஆகியவை இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தங்க கட்டிகள், நகைகளின் மதிப்பு 4.31 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை நடத்திய 2 நாள் சோதனையில் அர்பிதா பானர்ஜி வீட்டில் இருந்து 21.90 கோடி மற்றும் 27.90 என சுமார் 50 கோடி ரூபாய் (மொத்தம் 49.80 கோடி) பணத்தையும், 6 கிலோவுக்கு அதிகாமான தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் அமலாக்க துறையின் காவலில் இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி இன்று மருத்துவ பரிசோதனைக்காக நகரின் தெற்கு புறநகரில் உள்ள ஜோகாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.செய்தியாளர்கள் கேல்இக்கு பதில் அளித்த அவர் ஒரு சதியால் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்