காரை முந்தி சென்றவர்களுக்கு அடி, உதை; அரசு அதிகாரிக்கு எதிராக முதல்-மந்திரி அதிரடி நடவடிக்கை

இந்த சம்பவத்தில், மாஜிஸ்திரேட் அமித் சிங், தாசில்தார் வினோத் குமார், சிங்கின் கார் ஓட்டுநர் நரேந்திர தாஸ் பணிகா மற்றும் தாசில்தாரின் உதவியாளர் சந்தீப் சிங் ஆகியோருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-01-23 10:54 GMT

போபால்,

மத்திய பிரதேசத்தில் பந்தவ்கார் பகுதியின் சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் அமித் சிங். இவர், கார் ஒன்றில் அதிகாரிகளுடன் சென்று கொண்டு இருந்துள்ளார். அவர் உமரியா மாவட்டத்தில் நேற்று மாலை சென்றபோது, கார் ஒன்று அவர்களுடைய காரை முந்தி சென்றது.

இதில், இவருடைய கார் மீது அந்த கார் மோதுவது போல் சென்றுள்ளது என கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்து இறங்கி, முந்தி சென்ற வாகனத்தில் இருந்த 2 பேரை அரசு அதிகாரி சிங் மற்றும் அவருடன் காரில் பயணித்தவர்கள் தாக்கி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவத்தில், மாஜிஸ்திரேட் அமித் சிங், தாசில்தார் வினோத் குமார், சிங்கின் கார் ஓட்டுநர் நரேந்திர தாஸ் பணிகா மற்றும் தாசில்தாரின் உதவியாளர் சந்தீப் சிங் ஆகியோருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலானது. இதனை தொடர்ந்து, மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் உடனடியாக அமித் சிங்கை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், 2 இளைஞர்களை அடித்த சம்பவம் வெளிவந்ததும், மாஜிஸ்திரேட்டை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டேன்.

இது ஒரு துரதிர்ஷ்டவச சம்பவம். மாநிலத்தில் நல்ல நிர்வாகத்திற்கான அரசாங்கம் நடந்து வருகிறது. பொதுமக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற அணுகுமுறையை சகித்து கொள்ள முடியாதது என்று அவர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

எனினும், காரை ஓட்டி வந்த நபர் கவன குறைவாகவும், அதிவிரைவாகவும் வந்து, தன்னுடைய அரசு வாகனம் மீது மோதுவது போல் முந்தி சென்றார் என்றும் அவரை தாக்கவில்லை என்றும் சிங் கூறியுள்ளார். தன்னுடைய கார் ஓட்டுநர் மோதல் ஏற்படாமல் தவிர்த்து விட்டார். அந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடந்ததும் காரை விட்டு வெளியே வந்து, நிலைமையை அமைதிப்படுத்த முயன்றேன் என்று சிங் கூறினார்.

அந்த வீடியோவில், இளைஞர்கள் 2 பேரை சிங் மற்றும் மற்றவர்கள் சூழ்ந்தபடி காணப்படுகின்றனர். கும்பல் ஒன்று கம்புகள் உள்ளிட்டவற்றை கொண்டு அவர்களை தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதுபற்றி போலீசில் புகார் அளித்த இளைஞர்களில் ஒருவரான பிரகாஷ் தஹியா, மாஜிஸ்திரேட் என எழுதப்பட்ட வாகனத்தில் அமர்ந்திருந்தவர்கள் கீழே இறங்கி வந்து, தன்னையும் மற்றும் காரில் இருந்த சிவம் யாதவ் என்பவரையும் அடித்து, தாக்கினர். காரின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து, நொறுக்கினர் என தெரிவித்து உள்ளார். தஹியா மற்றும் சிவம் இருவரும் பரோலா கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். தஹியாவுக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்