முறையான சடங்குகள் இல்லாத இந்து திருமணத்தை அங்கீகரிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
இந்து திருமண சட்டப்படி, முறையான சடங்குகள் இல்லாத திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
விமானிகளாக பணியாற்றும் ஒரு ஆணும், பெண்ணும் முறையான இந்து திருமண சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அவர்கள் விவாகரத்து கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
இதுதொடர்பாக நீதிபதிகள் அளித்த தங்கள் தீர்ப்பில், "இளைஞர்களும், இளம்பெண்களும் திருமண பந்தத்தில் நுழைவதற்கு முன்பு, இந்திய சமூகத்தில் திருமணம் எவ்வளவு புனிதமானது என்பதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
திருமணம் என்பது ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி அல்ல. மது அருந்துவதற்கும், சாப்பிடுவதற்குமான நிகழ்ச்சி அல்ல. அழுத்தம் கொடுத்து, வரதட்சணை மற்றும் பரிசுப்பொருள் வாங்குவதற்கான வர்த்தக பரிமாற்ற நிகழ்ச்சி அல்ல.
ஒரு ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தை பெற்று, எதிர்காலத்தில் குடும்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கான உறவுக்கு அடித்தளமிடும் புனிதமான நிகழ்ச்சி.
2 தனிநபர்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணியமான, சமமான, ஆரோக்கியமான உறவில் நுழையும் புனிதமான நிகழ்ச்சி. ஆனால், இந்த மனுதாரர்களை போல், இளைய தலைமுறையினர் இந்து திருமண சட்டப்படி எவ்வித முறையான சடங்குகளும் இல்லாமல் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறுவதை நாங்கள் நிராகரிக்கிறோம்.
இந்து திருமணத்தில், மணமகனும், மணமகளும் அக்னி முன்பு 7 அடிகள் சேர்ந்து நடந்து வர வேண்டும். ரிக் வேதத்தில் இதை 'சப்தபடி' என்று கூறுவார்கள்.
''நாம் நண்பர்களாகி விட்டோம். இந்த நட்பில் இருந்து பிரிய மாட்டேன்'' என்று மணமகளிடம் மணமகன் கூறுவான். இந்த சடங்கு இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணத்தை இந்து திருமணமாக கருத முடியாது.
இ்ந்து திருமண சட்டப்படி, திருமணம் என்பது புனிதமானது. புதிய குடும்பத்துக்கான அடித்தளம். எனவே, இத்தகைய சடங்குகள் இல்லாமல் நடத்தப்படும் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் 7-வது பிரிவின்படி, இந்து திருமணமாக கருத முடியாது. திருமண சடங்குகள் இல்லாமல் வெறும் திருமண பதிவு சான்றிதழ் பெற்றாலும், அது திருமண அந்தஸ்தை உறுதி செய்யாது.
திருமண சர்ச்சைகளின்போது, அச்சான்றிதழ் ஒரு ஆதாரமாக கருதப்படலாம். ஆனால், சடங்கு இல்லாமல் நடத்தப்பட்ட திருமணத்துக்கு அச்சான்றிதழ் சட்ட அந்தஸ்து அளிக்காது. இந்து திருமண சட்டப்படி, அதை திருமணமாக கருத முடியாது.
1954-ம் ஆண்டின் சிறப்பு திருமண சட்டப்படி, எந்த மத, சாதி, இனத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறலாம். ஆனால், 1955-ம் ஆண்டின் இந்து திருமண சட்டப்படி, அவர்கள் 5-வது பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதுடன், 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ள சடங்குகளையும் செய்திருக்க வேண்டும்.
ஆனால், மனுதாரர்கள், இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்யவில்லை. முறையான சடங்குகள் இன்றி அவர்கள் பெற்ற திருமண பதிவு சான்றிதழ் செல்லாது. அவர்களது விவாகரத்து வழக்கும் ரத்து செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் கூறினர்.