சுப்ரீம் கோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் தடை நீடிக்கும்- மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
சுப்ரீம் கோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீடிக்கும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
பெங்களூரு: சுப்ரீம் கோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீடிக்கும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
மாறுபட்ட தீர்ப்பு
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. கர்நாடக ஐகோர்ட்டு, மாநில அரசின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், 2 நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை நேற்று வழங்கினர். அதாவது ஒரு நீதிபதி, ஐகோர்ட்டு உத்தரவு செல்லும் என்றும், இன்னொரு நீதிபதி ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்வதாகவும் கூறினார். இதுகுறித்து கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 2 பேர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு வழங்கினாலும் நாங்கள் அதற்கு தலை வணங்குவோம். தற்போது 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதனால் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு செல்கிறது. அங்கு தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம்.
போலீஸ் பாதுகாப்பு
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையொட்டி பதற்றமான பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உத்தரவிட்டோம். சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வரும் வரை கர்நாடக ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு அமலில் இருக்கும். அதாவது மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராவதற்கான தடை நீடிக்கும்.
கர்நாடக கல்வி சட்டத்தின்படி பள்ளி-கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் மத அடையாள உடைகளை அணிந்து வர முடியாது. கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்படி பள்ளி-கல்லூரிகள் செயல்படும். அதன்படி குழந்தைகள் பள்ளி-கல்லூரிகளுக்கு வர வேண்டும். வகுப்பில் எந்த மாணவியும் ஹிஜாப் அணிந்து ஆஜராக கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
நாங்கள் காத்திருப்போம்
போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களிடம் கூறுகையில், "ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று (நேற்று) தீர்ப்பு கூறியுள்ளது. 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். அதனால் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு செல்கிறது. அங்கு தீர்ப்பு வரும் வரை நாங்கள் காத்திருப்போம்" என்றார்.