பொதுமக்களின் வரிப்பணத்தில் ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகள் தரமாக இருப்பதை அரசு கண்காணிக்க வேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு

பொதுமக்களின் வரிப்பணத்தில் ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகள் தரமாக உள்ளதா? என அரசு கண்காணிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-07 21:33 GMT

பெங்களூரு:

பொதுமக்களின் வரிப்பணத்தில் ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகள் தரமாக உள்ளதா? என அரசு கண்காணிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்பணத்தை விடுவிக்க மனு

சாம்ராஜ்நகர் மற்றும் மண்டியா மாவட்டங்களில் போலீஸ் வீட்டுவசதித்துறை சார்பில் போலீசாருக்கு 144 குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தது. தனியார் கட்டுமான நிறுவனம் இந்த போலீஸ் குடியிருப்புகளை கட்டும் பணியை டெண்டர் எடுத்து செய்திருந்தது. இதற்காக ரூ.1 கோடியே 15 லட்சத்தை முன் பணமாக செலுத்தி இருந்தது. தற்போது கட்டுமான பணிகள் நிறைவு பெற்றிருந்தது.

ஆனால் தனியார் கட்டுமான நிறுவனம் கட்டிய போலீஸ் குடியிருப்புகள் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த நிறுவனம் முன்பணமாக செலுத்திய ரூ.1.15 கோடி விடுவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், தனியார் கட்டுமான நிறுவனம் போலீஸ் குடியிருப்புகள் கட்டுவதற்காக டெண்டர் எடுத்த விவகாரத்தில் முன்பணமாக செலுத்திய ரூ.1.15 கோடியை விடுவிக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

கண்காணிக்க வேண்டும்

அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்று வந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நிறைவு பெற்றது. இதையடுத்து, சாம்ராஜ்நகர், மண்டியாவில் கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்புகள் தரமற்றதாக இருப்பதால், தனியார் கட்டுமான நிறுவனம் முன்பணமாக செலுத்திய ரூ.1.15 கோடியை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி நாகபிரசன்னா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த போலீஸ் குடியிருப்பு தரமற்றதாக இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், 'பொதுமக்களின் வரிப்பணத்தில் ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகள் தரமாக இருக்க வேணடும். தரமற்ற குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தும், அந்த நிறுவனத்திற்கு சில ரசீதுகளுக்கு என்ஜினீயர்கள் ஒப்புதல் அளித்து பணம் விடுவித்துள்ளனர். இது தவறானது. கர்நாடக போலீஸ் வீட்டுவசதி துறையின் இந்த நடவடிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. பொதுமக்களின் வரிப்பணத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளை அரசு எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும்', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்