அமலாக்கத்துறையால் அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது - ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்

டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

Update: 2024-01-02 20:37 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி தொடர்பான வழக்கில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், மாநிலத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான பணிகளில் இருப்பதால் ஆஜராக முடியாது என்று சோரன் கூறிவிட்டார்.

அதன்பிறகு, ஆகஸ்ட் 24, செப். 9, செப். 23-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால்,சோரன் விசாரணைக்கு வரவில்லை. இதற்கிடையில், தனக்குஎதிராக அனுப்பப்பட்ட சம்மன்களை வாபஸ் பெறாவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்என்று சோரன் எச்சரித்தார். அதன்பிறகு 2 சம்மன்கள் அனுப்பப்பட்டன. தொடர்ந்து டிசம்பர் 12-ம் தேதி ஆஜராக வேண்டும்என்று சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை.

இந்த சூழலில் 7-வது முறையாக கடந்த மாதம் 29-ஆம் தேதி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்அனுப்பி உள்ளது. அதில், அவருக்கு வசதியான தேதி, நேரத்தில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை அவருக்கு 7 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இதனால் தற்போது அவர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதில் அளிக்கும் வகையில் அமலாக்க இயக்குனரகத்திற்கு (ED) கடிதம் எழுதி, சம்மன்கள் சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த முழு விஷயத்தையும் அமலாக்கத்துறை ஊடக விசாரணைக்கு உட்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் அளித்த பதிலில், தனது சொத்து விவரங்களை ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும். அரசாங்கத்தை சீர்குலைக்க அமலாக்கத்துறை முயற்சிப்பதாகவும் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்