ஹேமா கமிட்டி அறிக்கை விசாரணை குழுவிடம் ஒப்படைப்பு: முக்கிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு

கேரளாவில் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஹேமா கமிட்டி அறிக்கை விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2024-09-12 21:04 GMT

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் தொடர்பாக விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கையில் சில பகுதிகளை கேரள அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி கேரள ஐகோர்ட்டில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த ஐகோர்ட்டு முழு அறிக்கையை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த தினங்களுக்கு முன் ஐகோர்ட்டில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது இந்த அறிக்கையை உடனடியாக போலீஸ் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அந்த அறிக்கையில் போக்சோ உள்பட பல கிரிமினல் வழக்குகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று உள்ளதால், புகார் கொடுத்தவர்கள் விரும்பினால் வழக்கு உள்பட சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை சிறப்பு விசாரணைக் குழுவிடம் கேரள அரசு ஒப்படைத்துள்ளது. குழுவின் தலைவரான குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷிடம் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் சிறப்பு விசாரணைக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார், டி.ஐ.ஜி. அஜிதா பேகம் உள்பட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். முதல் கட்டமாக இவர்களிடம் விசாரணை நடத்தி அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த சிறப்பு விசாரணைக் குழு தீர்மானிக்கும். புகார் சுமத்தப்பட்ட வர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய புகார் கூறியவர்கள் விரும்பினால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். முக்கிய நடிகர்கள் உள்பட யார்? யார்? இந்த வழக்குகளில் சிக்கப் போகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்