சிவமொக்காவில் கனமழை: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

சிவமொக்காவில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-08-06 15:17 GMT

சிவமொக்கா;

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி சில நாட்கள் பெய்து ஓய்ந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக மலைநாடு, கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

இந்த நிலையில் சிவமொக்கா உள்பட மலைநாடு மாவட்டங்களில் 6-ந்தேதி(நேற்று) முதல் 9-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிவமொக்கா மாவட்ட கலெக்டர் செல்வமணி அறிவித்துள்ளதாவது:-

சிவமொக்கா உள்பட மலைநாடு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே, ஆற்றங்கரையோரம், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிவமொக்காவில் இதுவரை கனமழைக்கு 45 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 4 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது. 41 வீடுகள் பாதியளவு இடிந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்