கர்நாடகத்தில் தொடர் கனமழை: 5 மாவட்டங்களில் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 5 மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
பெங்களூரு:\கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 5 மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
தொடர் கனமழை
கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பெங்களூரு, மைசூரு, ஹாசன், சிக்கமகளூரு, சிவமொக்கா, தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கடந்த 17-ந்தேதி பெய்த கனமழையால் நகரில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
குடியிருப்பு மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். நகரில் பல்வேறு பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாததால், நவீன எந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. பெங்களூரு நகரில் நேற்று லேசாக மழை பெய்தது. பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும், வானம் மேகமூட்டமுடன் காணப்பட்டதுடன், குளிர்ந்த காற்றும் வீசியது. நேற்று சூரியனே தென்படவில்லை.
குடிநீர் குழாயில் உடைப்பு
இதேபோல் மைசூரு, மண்டியா, சிவமொக்கா, ஹாசன், தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் நேற்றும் பலத்த மழை கொட்டியது. மைசூரு மாவட்டம் கொப்பா கிராமத்தில் இருந்து குடகு மாவட்டம் குஷால்நகர் அருகே தங்க கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் கனமழையால் கொப்பா-தங்ககோவில் செல்லும் ரோட்டில் வெள்ளத்தில் சாலை அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி வருகிறது.
சாலையில் அரிப்பு
மண்டியா மாவட்டத்தில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு மண்டியா அருகே இந்துவா கிராமம் அருகில் பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 12 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாலையிலும் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்காக தற்காலிக ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.
துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகாவில் உள்ள மரக்கோனஹள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணை நிரம்பி வழிகிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வந்த வண்ணம் உள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் சிம்ஷா ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த ஆறு மண்டியா மாவட்டத்தில் பாய்ந்தோடி வருகிறது. தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியா மாவட்டம் மத்தூர், மலவள்ளி, மண்டியா தாலுகாவை சேர்ந்த கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், கால்நடைகளை கோசாலைகளில் விடவும் மாவட்ட கலெக்டர் அஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயிர்கள் நாசம்
மேலும் ஹாசன் மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை கொட்டியது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசமாகின. சென்னராயப்பட்டணாவில் தொட்டகெரே ஏரி நிரம்பியதால் அங்கு ஏராளமானோர் திரண்டு மீன்பிடித்தனர்.
இதேபோல், சிவமொக்காவிலும் நேற்று முன்தினமும், நேற்றும் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக சிவமொக்கா நகரில் மழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. நகரில் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்.சிவமொக்கா அருகே காஜனூரில் உள்ள துங்கா அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 5 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதேபோல், வடகர்நாடக மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
வெள்ளத்தில் மிதக்கின்றன
கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று தட்சிண கன்னடா, மண்டியா, மைசூரு, சிவமொக்கா, உடுப்பி ஆகிய 5 மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் அந்த 5 மாவட்டங்களிலும் நேற்று தொடக்கப்பள்ளி முதல் பி.யூ.சி. வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அறியாமல் அந்தப்பகுதியில் மாணவ-மாணவிகள் கொட்டும் மழையிலும் பள்ளிக்கு வந்தனர்.
விடுமுறை என அறிந்ததும் அவர்கள் மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு செல்வதை காணமுடிந்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.