பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை; நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழைக்கு நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் வெள்ளத்தில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலியானார்கள். மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-18 22:48 GMT

பெங்களூரு: பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழைக்கு நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் வெள்ளத்தில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலியானார்கள். மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் ஆய்வு செய்தார்.

100 டிகிரி வெயில்

கர்நாடகத்தில் கோடையையொட்டி இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பீதர், கலபுரகி, ராய்ச்சூர் உள்ளிட்ட வட கர்நாடக மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் மக்கள் தவியாய் தவித்தனர். தலைநகர் பெங்களூருவிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இங்கு வெயில் 90 டிகிரியை தாண்டவில்லை. அதையே தாங்க முடியாமல் நகர மக்கள் தவித்தனர்.

இந்த நிலையில் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. அதுவும் அசானி புயல் தாக்கிய பிறகு மழை மேலும் அதிகரித்துள்ளது. தலைநகர் பெங்களூருவில் தினமும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பகலில் சிறிது நேரம் மழை பெய்தது. பின்னர் இரவு 8 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை நேரம் ஆக ஆக தீவிரம் அடைந்தது.

உயிரிழப்பு

சூறாவளி இல்லாமல் கனமழை மட்டும் கொட்டியது. 2 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. வெளுத்து வாங்கிய இந்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் முக்கிய சந்திப்புகள் நீரில் மூழ்கின. ரிச்மண்ட் சர்க்கிள், பொம்மனஹள்ளி சர்க்கிள், எம்.ஜி.ரோடு சர்க்கிள், ஜே.சி.ரோடு சர்க்கிள், லால்பாக் சர்க்கிள் என பல்வேறு சர்க்கிள்கள் நீரில் மூழ்கின. அந்த பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஆறுபோல ஓடியது. உல்லால் பகுதியில் உள்ள ஏரி அருகே காவிரி குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கனமழை பெய்து மழை வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் குழிக்குள் சிக்கிய அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் தேவ் பரத் என்பவர் பீகார் மற்றும் அங்கித்குமார் உத்தரபிரதேசத்தை சோ்ந்தவர்கள் ஆவர்.

அந்த குழாயில் சிக்கிய திரிலோக் என்பவர் உயிர் பிழைத்தார். நகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. பெங்களூரு எலகங்கா பகுதியில் கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த குடியிருப்பு கட்டிடத்தில் வசிப்பவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அங்குள்ள குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

மரம் சாய்ந்தது

அதே போல் ராஜராஜேஸ்வரி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. ஐடியல் ஹோம் லே-அவுட் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதி ஏரி போல் காட்சியளித்தது. அந்த லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் தரைத்தளத்தில் நீர் தேங்கி நின்றது. அங்கு மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தத்தாத்ரேயா நகரில் கால்வாயை ஒட்டியுள்ள ஏராளமான வீடுகளுக்குள் நீர் புகுந்தது.

கே.ஆர்.புரத்திலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மல்லேசுவரத்தில் உள்ள 18-வது கிராசில் பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. அதனால் சதாசிவநகருக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. பாதராயனபுராவில் கால்வாயில் தூர்வார நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் எந்திரம் உருண்டு விழுந்தது. உல்லால் வட்டரஹள்ளி பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நின்றுள்ளது. அதனால் அந்த பகுதி தீவு போல் காட்சியளிக்கிறது.

நேற்று மாலை வரை மழைநீர் வடியாமல் இருந்தது. எசருகட்டாவில் உள்ள சப்தகிரி தனியார் மருத்துவமனைக்கு உள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். தற்காலிகமாக அந்த நோயாளிகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஹெண்ணூரில் சாக்கடை கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள், உணவு பொருட்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன.

பசவராஜ் பொம்மை ஆய்வு

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று மழையால் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டாலர்ஸ் காலனியில் தேங்கி இருந்த மழைநீரை அகற்றும்படி ஊழியர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அவர், பெங்களூருவில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததாகவும், மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ராஜராஜேஸ்வரி, ஒசகெரஹள்ளி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் நீர் தேங்கி நிற்கிறது. சில பகுதிகளில் கால்வாய் அருகே வீடுகளை கட்டியுள்ளனர். அந்த பகுதிகளில் நீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் கால்வாய்கள்

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கால்வாயில் செல்லும் நீர் வெளியே வர முடியாத நிலை ஏற்படுத்தப்படும்.

கால்வாய்களில் மழைநீர் தடையின்றி செல்ல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில இடங்களில் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளனர். அத்தகைய பகுதிகளில் கூடுதல் கால்வாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் ஒரு ஆண்டுக்குள் மேற்கொள்ளப்படும்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

பெங்களூருவில் 800 கிலோ மீட்டர் நீளம் கால்வாய் உள்ளது. இதில் கடந்த 2021-ம் ஆண்டு 400 கிலோ மீட்டர் நீளத்திற்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும். பெங்களூருவில் மழைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

கால்வாய் மற்றும் ஏரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பாதாள சாக்கடை, கியாஸ் குழாய், வடிகால் வாரியம், தொலைத்தொடர்பு வயர்கள், பூமிக்கு அடியில் மின் கம்பிகளை அமைத்தல் போன்ற பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைவாக முடிக்க ஒரு செயல்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு சாலைகள் சீரமைக்கப்படும். மழை நீர் புகுந்து பாதிப்புக்குள்ளான வீடுகளுக்கு நிவாரணமாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த ஆய்வின்போது வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்