வெப்ப அலை எதிரொலி; மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம்

நாடு முழுவதும் வெப்ப அலையை முன்னிட்டு மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2023-06-20 04:43 GMT

புதுடெல்லி,

நாட்டின் பல இடங்களில் வெப்ப அலை பரவி காணப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் உயர்மட்ட கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பால், இந்திய வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

வெப்ப அலை பரவலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பீகாரின் கயாவில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மொத்தம் 58 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அதிகரித்துள்ள வெப்பநிலையால், பாட்னாவில் வரும் 24-ந்தேதி வரை 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து கல்வி செயல்பாடுகளும் ரத்து செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரவிருக்கிற நாட்களில் டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானாவில் வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி வரை உயர கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி நரேஷ் குமார் கூறியுள்ளார். இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்