அரியானா சட்டசபை தேர்தல்; ஜனநாயகத்தின் புனித திருவிழாவில் வாக்காளர்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்: பிரதமர் மோடி

அரியானா சட்டசபை தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க செல்லும் இளம் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Update: 2024-10-05 04:08 GMT

புதுடெல்லி,

90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதி நடைபெறும்.

இந்த தேர்தலில், 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில், முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

அரியானா முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள செய்தியில், அரியானா சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஜனநாயகத்தின் இந்த புனித திருவிழாவின் ஒரு பகுதியாக அனைத்து வாக்காளர்களும் பங்கெடுத்து கொண்டு, வாக்களிப்பதில் ஒரு புதிய சாதனையை படைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

இந்த தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்க செல்லும் இளம் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார். அரியானாவில் 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க., தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்கு மையத்தில் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த தேர்தலில், அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா, விளையாட்டு வீராங்கனைகளான வினேஷ் போகத் மற்றும் மனு பாக்கர், அரியானா முன்னாள் முதல்-மந்திரி மற்றும் மத்திய மந்திரியான மனோகர் லால் கட்டார் ஜனநாயக ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அஜய் சிங் சவுதாலா உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர். தொடர்ந்து வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்