ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு - பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலி, 21 பேர் பத்திரமாக மீட்பு
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில், பனிச்சறுக்குக்காக சென்ற வெளிநாட்டைச் சேர்ந்த 21 பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் 2 உள்ளூர் வழிகாட்டிகள் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாரமுல்லா போலீசார் மற்றும் சுற்றுலாத்துறையின் கூட்டு மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 19 பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் 2 உள்ளூர் வழிகாட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மேற்படி சட்ட நடவடிக்கைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.