குஜராத்தில் 12 பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடைநீக்கம்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சுயேட்சையாக போட்டியிட முயன்றதால் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-11-23 05:40 GMT

ஆமதாபாத்,

குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

குஜராத்தில், கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

குஜராத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பல கட்டங்களாக பாஜக வெளியிட்டது. இதில் முதல்கட்ட தேர்தலில் 38 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல், பரிசீலனை, திரும்பப்பெறல் யாவும் முடிந்துள்ள நிலையில், அங்கு 1,621 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதல் கட்ட தேர்தலை 788 வேட்பாளர்களும், இரண்டாவது கட்ட தேர்தலை 833 வேட்பாளர்களும் சந்திக்கின்றனர்.

குஜராத் சட்டசபை தேர்தலில் 42 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சிலர் சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், சுயேட்சையாக மனுதாக்கல் செய்த 12 பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்து மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சுயேட்சையாக போட்டியிட முயன்ற 7 பேர் கட்சியில் இருந்து நேற்று முன்தினம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்