குஜராத்: அடுக்குமாடி குடியிருப்பில் 3 சகோதரிகள் உள்பட 4 பேர் சடலமாக மீட்பு
குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 3 சகோதரிகள் உள்பட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.;
காந்திநகர்,
குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4 பேரின் உடல்கள் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே ஜசுபென் வதேல்(58), அவரது சகோதரிகள் சாந்தாபென் வதேல்(53) மற்றும் கவுரிபென் மாவத்(55) மற்றும் கவுரிபென்னின் கணவர் ஹீராபாய்(60) ஆகிய 4 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர். அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இவர்கள் 4 பேரும் நேற்று இரவு 10 மணியளவில் உறங்கச் சென்றுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு ஜசுபென்னின் மகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது 4 பேரும் சுயநினைவின்றி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களது வீட்டில் எரிவாயு மூலம் இயங்கும் வாட்டர் ஹீட்டர் ஓடிக்கொண்டிருந்தால், வாயு கசிவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 பேரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு இது குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.