குஜராத் பால விபத்து: மாநிலம் முழுவதும் நாளை மறுநாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும்; முதல்-மந்திரி அறிவிப்பு

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக, நாளை மறுநாள் மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-10-31 17:40 GMT



காந்திநகர்,


குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

ஆனால், 5 நாட்களில் பாலம் திடீரென நேற்று மாலை இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்-மந்திரி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடந்துள்ளது.

இந்த கூட்டத்தில் சம்பவம் நடந்தது முதல் இதுவரை, மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் பற்றி பிரதமர் மோடியிடம் விளக்கி கூறப்பட்டன. இந்த சோக சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து விசயங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி உள்ளார். இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இந்த உயர்மட்ட கூட்டத்தில் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பாய் பட்டேல், உள்துறை மந்திரி ஹர்ஷ் சாங்கவி, தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. மற்றும் பிற அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்பின், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், குஜராத்தில் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக, நாளை மறுநாள் (நவம்பர் 2-ந்தேதி) மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, தேசிய கொடி மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். குஜராத்தில் அன்று ஒரு நாள் விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறாது என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்