ரூ.1,000-க்கு குறைவான ஓட்டல் அறை வாடகைக்கும் ஜி.எஸ்.டி. வரி: மந்திரிகள் குழு சிபாரிசுகளுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல்

அஞ்சலக சேவைகள், காசோலைகள் ஆகியவற்றுக்கும் வரி விதிக்கப்படுகிறது. இதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

Update: 2022-06-28 23:37 GMT

புதுடெல்லி,

நாள் ஒன்றுக்கு ரூ.1,000-க்கு குறைவான ஓட்டல் வாடகை மீதான ஜி.எஸ்.டி. வரிவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. அஞ்சலக சேவைகள், காசோலைகள் ஆகியவற்றுக்கும் வரி விதிக்கப்படுகிறது. இதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) தொடர்பான முடிவுகள் எடுப்பதற்காக, ஜி.எஸ்.டி. கவுன்சில் செயல்பட்டு வருகிறது. நேற்று இதன் கூட்டம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகாரில் நடைபெற்றது.

உறுப்பினர்களாக இருக்கும் மாநில நிதி மந்திரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை மாற்றி அமைத்தல், 4 விதமான வரி அடுக்குகளை மாற்றி அமைத்தல், சில பொருட்களுக்கான வரிவிலக்கை ரத்து செய்தல் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அடங்கிய குழுவை கவுன்சில் அமைத்திருந்தது. அக்குழு தனது இடைக்கால அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது.

அதன் பரிந்துரைகள் மீது நேற்றைய கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில், அந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முக்கியமான பரிந்துரைகள் வருமாறு:-

நாள் ஒன்றுக்கு ரூ.1,000-க்கு குறைவான ஓட்டல் அறை வாடகை உள்ளிட்ட சில சேவைகளுக்கு அளித்திருந்த வரிவிலக்கை ரத்து செய்ய வேண்டும். அவற்றுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும்.

நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆஸ்பத்திரி அறை (தீவிர சிகிச்சை பிரிவு தவிர்த்து) வாடகைக்கு 5 சதவீத வரி விதிக்க வேண்டும்.

அஞ்சலக சேவை

அஞ்சல் அட்டை, உள்நாட்டு கடிதம், புக் போஸ்ட், 10 கிராமுக்கு குறைவான கடித உறைகள் ஆகியவற்றை தவிர அனைத்து அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிக்க வேண்டும். காசோலைகள் தனித்தனியாகவோ, புத்தகமாகவோ எப்படி இருந்தாலும், அவற்றுக்கு 18 சதவீத வரி விதிக்கவேண்டும்.

குடியிருப்புகளை குடியிருப்பு தேவைக்காக வாடகைக்கு விடும் வர்த்தக நிறுவனங்களுக்கு அளித்திருந்த வரிவிலக்கை ரத்து செய்ய வேண்டும்.

தயிருக்கு வரி

பாக்கெட்டில் அடைத்து லேபிள் ஒட்டி விற்கப்படும் தயிர், லஸ்சி, கோதுமை மாவு ஆகியவற்றின் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும். சமையல் எண்ணெய், நிலக்கரி, எல்.இ.டி. விளக்கு, அச்சு மை, சோலார் வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றுக்கான வரிவிகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

மாநிலத்துக்குள் ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்கம், நகைகள், விலைஉயர்ந்த கற்கள் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கான மின்னணு ரசீதை மாநிலங்களே வழங்க அனுமதிக்கலாம்.

மேற்கண்ட பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு நீட்டிக்கப்படுமா?

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்றும் (புதன்கிழமை) நடக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் முறை இம்மாதத்துடன் முடிவடைகிறது. அதை மேலும் நீட்டிப்பது பற்றி இன்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.

சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம் ஆகியவற்றின் மீது 28 சதவீத வரி விதிப்பது பற்றியும் இன்று முடிவு எடுக்கப்படுகிறது.

இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் அல்லது மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. வருவாய் பகிர்வை 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்