கர்நாடகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.25 லட்சம் கோடியாக அதிகரிப்பு
கர்நாடகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.25 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதாக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பசவராஜ் ராயரெட்டி கூறினார்.
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் பசவராஜ் ராயரெட்டி பேசும்போது கூறியதாவது:-
குறை சொல்ல மாட்டேன்
முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கர்நாடக ஏழை மக்களின் கதவுகளை திறப்பதாக உள்ளது. சித்தராமையா இதுவரை 14 பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதில் 13 பட்ஜெட் உபரி பட்ஜெட் ஆகும். தற்போது செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார்.
அரசுகள் கடன் வாங்குவதை நான் குறை சொல்ல மாட்டேன். வளர்ச்சி ஏற்படுத்த வேண்டுமெனில் கடன் வாங்க வேண்டியது அவசியம். மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதம் வரை கடன் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நமது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.25 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பு
ஆண்டில் நாம் ரூ.62 ஆயிரம் கோடி கூடுதலாக செலவு செய்கிறோம்.
பா.ஜனதா உறுப்பினர்கள்
கா்நாடக அரசின் நிதிநிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் நல்லது. அடுத்து 16-வது நிதி ஆணையம் அமைக்கப்பட உள்ளது. இதில் நமக்கு அநியாயம் ஏற்படாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக அரசு முயற்சி எடுக்க வேண்டும். சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியபோது, இருக்கையில் இருந்த துணை சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து எறிந்தது சரியல்ல. பொறுப்பற்ற முறையில் பா.ஜனதா நடந்து கொண்டது.
இவ்வாறு பசவராஜ் ராயரெட்டி பேசினார்.