வரி தகராறுகளுக்கு தீர்வு.. வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் நிவாரணம் அறிவித்த நிதி மந்திரி
நிலுவையில் உள்ள பழைய வரி கோரிக்கைகள் திரும்ப பெறப்படுவதால் சுமார் 1 கோடி வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.;
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்தார்.
மேலும், நிலுவையில் உள்ள நேரடி வரி பாக்கி தொடர்பாக, வருமான வரித்துறையிடம் முறையீடு செய்து போராடிக்கொண்டிருக்கும் வரி செலுத்துவோருக்கு, இந்த பட்ஜெட்டில் நிவாரணம் அறிவித்துள்ளார். அதாவது 1962 ஆம் ஆண்டிலிருந்தே பிரச்சினையில் உள்ள நேரடி வரி கோரிக்கைக்கான தீர்வுத் திட்டத்தை அறிவித்தார்.
அதாவது, 2009-2010 நிதியாண்டு வரையிலான காலப்பகுதிக்கு 25,000 ரூபாய் வரையிலும், 2010-11 முதல் 2014-15 நிதியாண்டு வரையிலான காலப்பகுதிக்கு 10,000 ரூபாய் வரையிலும், நிலுவையில் உள்ள நேரடி வரி கோரிக்கைகள் திரும்பப் பெறப்படும் என நிதி மந்திரி அறிவித்தார். இந்த வரி பாக்கி தள்ளுபடி நடவடிக்கையால் சுமார் 1 கோடி வரி செலுத்துவோர் பயனடைவார்கள் என்றும் கூறினார். வரி செலுத்துவோருக்கான சேவைகளை மேம்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
நிலுவையில் உள்ள வரிக் கோரிக்கைகள், வரி செலுத்துவோருக்கு பணத்தை திரும்பப் பெறுவதில் (ரீபண்ட்) தடையை ஏற்படுத்துகின்றன. அதாவது, முந்தைய ஆண்டுகளின் வரிக் கோரிக்கைகள் நிலுவையில் இருந்தால், நடப்பு ஆண்டிற்கான வருமான வரி கணக்கை சரிபார்த்து ரீபண்ட் வழங்குவதற்கான நடைமுறையை வருமான வரித் துறை நிறைவு செய்யாது. இப்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி தகராறு தீர்வு திட்டம், இந்த சிக்கலை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.