மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பை அரசு தீவிரமாக எடுத்து விசாரணை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்து விசாரணை நடத்தி வருவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-11-22 21:50 GMT

பெங்களூரு:

குக்கர் குண்டு வெடிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ந் தேதி ஓடும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. அதில் ஆட்டோ டிரைவர் மற்றும் அந்த குண்டுடன் பயணம் செய்த பயங்கரவாதி ஷாரிக் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் மங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பயங்கரவாதி ஷாரிக்கிற்கு 45 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை மோசமாக இருப்பதால் அவரிடம் போலீசாரால் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பயங்கரவாதியின் உடல்நிலையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

தீவிரமாக எடுத்து விசாரணை

இந்த பயங்கரவாத செயல் குறித்து கர்நாடக போலீசாருடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை போலீசாரும் மங்களூருவில் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் சமீபத்தில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களும், இந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கிடைத்த வெடி பொருட்களும் ஒரே மாதிரியாக உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த பயங்கரவாத செயல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. '18 சிலிப்பர் செல்' நபர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவா்களுடன் பயங்கரவாதி தொடர்பில் இருந்துள்ளான். அதன்படி செயல்பட்டு வந்துள்ளான். கர்நாடகத்திற்கு வெளியே பிற மாநிலத்தில் தொடர்பில் இருந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடவடிக்கை எடுத்துள்ளனர்

நாட்டின் நலன் கருதி இந்த வழக்கை நாங்கள் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளோம். தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள், பயங்கரவாதியின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பினர் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்