உத்தரகன்னடாவில் அரசு உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

உத்தரகன்னடாவில் அரசு உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Update: 2022-09-20 18:45 GMT

பெங்களூரு:

உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று உத்தரகன்னடா மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் உத்தரகன்னடாவில் உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி (மல்டி ஸ்பெஷாலிட்டி) அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உத்தரகன்னடாவில் அரசு உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்று அந்த மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உத்தரகன்னடாவில் அரசு உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார். அந்த ஆஸ்பத்திரியை எங்கு அமைக்க வேண்டும், எப்படி அமைக்க வேண்டும் என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மருத்துவ சேவைகள்

இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். நிதித்துறையின் ஒப்புதலையும் பெறுவோம். குமடா பகுதி உத்தரகன்னடாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. அதனால் அங்கு இந்த ஆஸ்பத்திரியை அமைப்பது குறித்து ஆலோசிக்கிறோம். சிா்சியில் 250 படுக்கைகளை கொண்ட ஒருங்கிணைந்த ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டு வருகிறது.

கார்வாரில் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அங்கு நடப்பு ஆண்டு முதல் மாணவர்களை சோ்க்க அனுமதி கிடைத்துள்ளது. உத்தரகன்னடா மாவட்டத்தில் மருத்துவ சேவைகளை சிறப்பான முறையில் வழங்குவது, அதன் சேவைகளை தரம் உயர்த்துவது, மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையை நீக்குவது போன்றவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் உத்தரகன்னடாவுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்