புகை பீடா சாப்பிட்ட சிறுமி... வயிற்றில் ஓட்டை விழுந்த பயங்கரம் - டாக்டர் சொல்வதென்ன..?

திரவ நைட்ரஜன் கலந்த புகை பீடா சாப்பிட்டதால் வயிற்றில் ஓட்டை விழுந்த சிறுமிக்கு உயர்தொழில்நுட்ப அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.;

Update:2024-05-23 03:21 IST

கோப்புப்படம்

பெங்களூரு,

பெங்களூருவில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தாள். அப்போது உணவு சாப்பிட்டுவிட்டு, அங்கு வழங்கப்பட்ட திரவ நைட்ரஜன் கலக்கப்பட்ட புகை பீடா ஒன்றை சாப்பிட்டாள். இதையடுத்து வீட்டிற்கு சென்ற நிலையில் சிறுமியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.

சிறுமி வயிற்று வலியால் அவதி அடைந்தாள். உடனே சிறுமியை பெற்றோர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் சிறுமியை பரிசோதனை செய்தார். அப்போது சிறுமி வயிற்றில் ஓட்டை விழுந்தது தெரிந்தது.

அதாவது திரவ நிலையில் இருந்த நைட்ரஜன் கலந்த புகை பீடாவை சிறுமி சாப்பிட்டதால், அது வயிற்றுப்பகுதியில் ஓட்டை விழுந்ததற்கு காரணம் என்று கூறினார். மேலும் சிறுமிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமி உடனடியாக ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு உயர்தொழில் நுட்ப அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டதாக டாக்டர் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் விஜய், "திரவ நைட்ரஜன் கலந்த பீடாவை சிறுமி சாப்பிட்டதால், சிறுமியின் வயிற்றுப்பகுதியில் அது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் சிறுமியின் வயிற்றுப்பகுதியில் ஓட்டை விழுந்தது. சுமார் 4 முதல் 5 சென்டி மீட்டர் அளவுக்கு ஓட்டை விழுந்தது. உரிய நேரத்தில் சிறுமிக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டதால் சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டது. சிறுமிக்கு உயர் தொழில்நுட்பங்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதாவது சிறுமியின் வயிற்றுப்பகுதிக்குள் சிறிய ரக கேமரா செலுத்தப்பட்டு, வயிற்று குடலின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது என்றார். அறுவை சிகிச்சைக்கு பிறகு 2 நாட்கள் சிறுமி தீவிர கண்காணிப்பில் உள்ளார். இன்னும் 6 நாட்களுக்கு பிறகு சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்