போர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்

போர்ப்ஸ் ஆண்டுதோறும் இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

Update: 2022-10-20 16:37 GMT

Image Courtesy: PTI 

மும்பை,

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார். அவரின் நிகர சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

போர்ப்ஸ் ஆண்டுதோறும் இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானியை இரண்டாம் இடத்திற்கு தள்ளி கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 88 பில்லியன் டாலர் ஆக உள்ளது.

மேலும் இந்த பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் ராதாகிஷன் தமானி, சைரஸ் பூனவல்லா, சிவ் நாடார், சாவித்ரி ஜிண்டால், தீலீப் ஷாங்வி, ஹிந்துஜா சகோதரர்கள், குமார் மங்கலம் பிர்லா மற்றும் பஜாஜ் குடும்பம் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் பட்டியலை தவிர உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னிலை பெற அதானி, பெசோஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோருக்கு இடையே சமீப நாட்களாக கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கவுதம் அதானி உருவெடுத்தார்.

அதை தொடர்ந்து கடந்த ஜூலையில், அதானி மைக்ரோசாப்டின் பில் கேட்ஸை விஞ்சி உலகின் நான்காவது பணக்காரர் ஆனார். அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி மூன்றாவது பெரிய பணக்காரராக உருவெடுத்தார்.

பின்னர் அவர் கடந்த மாதம் முதல் முறையாக இந்த பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறி இருந்தார். பின்னர் கடந்த மாத இறுதியில் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்