உலக பணக்காரர்கள் பட்டியலில் விர்ரென வேகமாக முன்னேறும் கவுதம் அதானி...! முதல் இடம் பிடிப்பாரா...?
உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி வேகமாக முன்னேறி வருகிறார்.
சென்னை,
உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான இந்தியாவின் கவுதம் அதானி விரைவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 2-வது இடத்தில் உள்ள ஜெப் பெசோஸ் ஒரே நாளில் 9.84 பில்லியன் டாலர்களை (கிட்டத்தட்ட ரூ. 80,000 கோடி) இழந்துள்ளார். இதனால் அவருக்கும் அதானியின் சொத்து மதிப்புக்கும் இடையேயான வித்தியாசம் இப்போது வெறும் 3 பில்லியன் டாலர் மட்டுமே.
சமீப காலமாகவே அதானியின் சொத்து மதிப்பானது மிக வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி வேகமாக முன்னேறி வருகிறார். இந்த ஆண்டு பிப்ரவரியில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கவுதம் அதானி உருவெடுத்தார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஏப்ரலில், கவுதம் அதானியின் நிகர மதிப்பு டாலர் 100 பில்லியனைத் தாண்டியது, கடந்த ஜூலையில், அவர் மைக்ரோசாப்டின் பில் கேட்ஸை விஞ்சி உலகின் நான்காவது பணக்காரர் ஆனார். அதை தொடர்ந்து அவர் ஆகஸ்ட் 30 அன்று, பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி மூன்றாவது பெரிய பணக்காரர் ஆனார்.
தற்போது ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மஸ்கின் நிகர மதிப்பு இப்போது டாலர் 256 பில்லியன் ஆகவும், பெசோஸின் நிகர மதிப்பு $150 பில்லியன் ஆகவும் உள்ளது.
இவர்களை தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு டாலர் 147 பில்லியனாக உள்ளது. இதனால் கவுதம் அதானி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி விரைவில் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக உருவெடுப்பார் என தெரிகிறது.