உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் 3-வது இடத்தில் கவுதம் அதானி- ஜெப் பெசோஸுக்கு பின்னடைவு
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி அதானி மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவை சேர்ந்த கவுதம் அதானி மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். போர்ப்ஸ் நிறுவன அறிக்கையின் படி உலக பணக்காரர்களில் முதலிடத்தில் எலான் மஸ்க் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நிலையில் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் மட்டும் அவ்வப்போது மாறி வருகின்றனர்.
அதன்படி கடந்த மாத தொடக்கத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக இரண்டாவது இடத்தில் இருந்த அதானி, அதன் பின்னர் பங்குச் சந்தையில் அவரது நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்ததால் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வருவததன் காரணமாக அதானி நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வருகிறது. இதனால் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி அதானி மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 131 பில்லியன் டாலர் (ரூ. 10.81 லட்சம் கோடி) என்று கூறப்பட்டுள்ளது. ஜெப் பெசோஸ் இந்த பட்டியலில் 126 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் 223.8 (ரூ. 18.42 லட்சம் கோடி) பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திலும், பெர்னார்ட் அர்னால்ட், 156.5 டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.