ஜி-20 உச்சி மாநாடு; இந்தியாவின் பாரம்பரிய இசை கச்சேரியை ரசித்த விருந்தினர்கள்

டெல்லியில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் பாரம்பரிய இசை கச்சேரியை வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.;

Update: 2023-09-10 09:27 GMT

புதுடெல்லி,

டெல்லியில் பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநாட்டுக்கு அழைப்பு விடப்பட்ட மற்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. சர்வதேச விவகாரங்களில் தீர்வு காண்பதற்கான வழிகளை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இதனை தொடர்ந்து இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடத்திற்கான ஒரு பெரிய வரலாற்று ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதனை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்தன.

ஜி-20 உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத் மண்டபத்திற்கு வருகை தந்து முன்னின்று நடத்தினார்.

ஜி-20 உச்சி மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்து நிகழ்ச்சியின்போது, நாட்டின் பாரம்பரிய இசையை கொண்டு கச்சேரி நடத்தப்பட்டது.

இதில், 78 கலைஞர்கள் பங்கேற்று, இந்துஸ்தானி, கர்நாடக மற்றும் நாட்டுப்புற பாடல்கள் கொண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரிய வகை இசை கருவிகளை கொண்டு, நம்முடைய ஈடு இணையற்ற மற்றும் தனித்துவ இசை பாரம்பரியம் வெளிப்படுத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில், சுர்சிங்கர், மோகன வீணா, ஜலதரங்கம், ஜோதிய பாவா, தங்காலி, தில்ருபா, சாரங்கி, கமைசா, மட்ட கோகில வீணா, நளதரங்கம், துங்புக், பகாவஜ், ரபாப், ராவண்ஹத்த, தல் டாணா, ருத்ர வீணா உள்ளிட்ட பல்வேறு இசை கருவிகள் இசைக்கப்பட்டன.

இவற்றில் காந்தர்வ அதோத்யம் முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. இதில், நாடு முழுவதும் உள்ள இசை கருவிகள் கொண்டு இந்துஸ்தானி, கர்நாடகம், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் சமகால இசை ஆகியவற்றை பாரம்பரிய கருவிகளை உபயோகித்து நடத்தி காண்பித்தனர்.

இந்தியாவின் பாரம்பரிய இசையை வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள், அனைத்து மாநில முதல்-மந்திரிகள், மாநில மற்றும் மத்திய மந்திரிகள், மத்திய அரசிலுள்ள அனைத்து செயலாளர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிற முக்கிய விருந்தினர்கள் உள்ளிட்டோர் ரசித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்