பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் முதல் சேவையை தொடங்கியது

பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் முதல் சேவையை தொடங்கியது

Update: 2022-10-02 21:34 GMT

பெங்களூரு: பெங்களூரு பையப்பனஹள்ளியில் இருந்து பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் நேற்று தனது முதல் சேவையை தொடங்கியது.

தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிற மாநிலங்களில் இருந்து மக்கள் படை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து பெருமளவில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பெங்களூருவில் குடியேறி உள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த ரெயில் அக்டோபர் 2-ந்தேதி (நேற்று) முதல் பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்தது. இதற்கு பெங்களூரு கே.பி.அக்ரஹாரா உள்பட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தமிழக தென்மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதற்கு தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.

முதல் பயணம்

இந்த நிலையில் தென்மேற்கு ரெயில்வே அறிவித்ததுபோல், நேற்று பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் நிலையத்தின் 7-வது நடைமேடையில் இருந்து நாகர்கோவில் ரெயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது. சிட்டி ரெயில் நிலையத்தில் ஏறுவதுபோல், வழக்கமான கூட்டம் அந்த ரெயிலில் காணப்பட்டது. ரெயிலில் பயணிக்க இருந்தவர்களில் சிலர், நாகர்கோவில் ரெயில் புறப்படும் இடம் மாற்றப்பட்டதற்கு கண்டனத்தையும், வரவேற்பையும் வெளிப்படுத்தினர். அதன்படி ரெயில் பயணியான திருநெல்வேலியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் கூறுகையில், நான் பெங்களூருவில் வசித்து வரும் எனது நண்பரை சந்திப்பதற்காக பெங்களூருவுக்கு வருவேன். எப்போதுமே நான் நாகர்கோவில் ரெயிலையே பயன்படுத்தி வந்தேன். தற்போது இந்த ரெயில் புறப்படும் இடம் பையப்பனஹள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது, லேசான சிரமத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

சிவாஜிநகரை சேர்ந்த மற்றொரு பயணி ஒருவர் கூறியதாவது:- திருநெல்வேலியை சேர்ந்த நான் பெங்களூரு சிவாஜிநகரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தேன். அன்று முதல் நான் பெங்களூரு சிட்டி-நாகர்கோவில் ரெயிலில் பயணித்து வருகிறேன். தற்போது பையப்பனஹள்ளியில் இருந்து பயணிக்க உள்ளேன். 2 ரெயில் நிலையங்களும் எங்களுக்கு சில தூரத்தில் தான் அமைந்துள்ளது. அதனால் எங்களுக்கு பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை என்றார்.

எவ்வாறு ெசல்லலாம்

பெங்களூரு ராஜாஜிநகர், கே.பி.அக்ரஹாரா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் மெட்ரோ ரெயில் மூலம் பையப்பனஹள்ளி மெட்ரோ நிலையத்திற்கு சென்றால், கூடுதல் நேரம் ஆவதோடு, அங்கிருந்து இறங்கி மீண்டும் சர்.எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கு ஆட்டோக்களில் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், ஆட்டோவில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றியே அவர்கள் அழைத்து செல்வார்கள்.

இதனால் நேரமும் வீணாகிறது. அதேசமயம் பையப்பனஹள்ளி மெட்ரோ நிலையத்திற்கு முன்பு உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோக்களில் சென்றால் ரூ.80 முதல் ரூ.120 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குடும்பத்துடன் செல்வதற்கு சுவாமி விவேகானந்தா மெட்ரோ நிலைய வழி சுலபமாக உள்ளதாக ரெயில் பயணிகள் கூறினர். சர்.எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிறுத்தத்தில் இருந்து சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்