கர்நாடகத்தில் இன்று முதல் இலவச மருத்துவ-ரத்த தான முகாம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி உத்தரவு
கர்நாடகத்தில் இன்று முதல் இலவச மருத்துவ-ரத்த தான முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று முதல் இலவச மருத்துவ-ரத்த தான முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ முகாம்கள்
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்று(சனிக்கிழமை) பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி அவர் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது சுதாகர் பேசியதாவது:-
பிரதமர் பிறந்த நாளையொட்டி, கர்நாடகத்தில் இலவச மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் போன்றவை நாளை (இன்று) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை நடைபெற வேண்டும். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சி பெங்களூரு மருத்துவ கல்லூரியில் தொடங்கி வைக்கப்படுகிறது.
காப்பீட்டு திட்ட அட்டை
மத்திய-மாநில அரசுகளின் சுகாதார திட்டங்கள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கர்நாடகத்தில் தொற்று அல்லாத நோய்களால் இறப்புகள் அதிகமாக நிகழ்கின்றன. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை கண்டறிய வேண்டும்.
கர்நாடகத்தில் பூஸ்டர் தடுப்பூசி 20 சதவீதம் பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. அதனால் தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கண் பரிசோதனையும் செய்ய வேண்டும். கர்நாடகத்தில் ஆயுஸ்மான் பாரத்-ஆரோக்கிய கர்நாடக காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 35 லட்சம் பேருக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. 1 கோடி பேருக்கு இந்த காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.