குதிரேமுகா வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ

குதிரேமுகா வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டது. 3 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம் நாசமாகின.

Update: 2023-03-14 04:30 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் பல ஏக்கரில் மரங்கள், செடி-கொடிகள் எரிந்து நாசமாகி வருகிறது. கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதால் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இது வனத்துறையினருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலயில் நேற்று முன்தினம் கலசா தாலுகா குதிரேமுகா வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர், தீயணைப்பு படையினருடன் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர், தீயணைப்பு படையினர், தன்னார்வலர்கள் இணைந்து காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

ஆனாலும் அதற்குள் 3 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசமாகின. இதில் வன விலங்குகள் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு குதிரேமுகா வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல், சிக்கமகளூரு அருகே உத்தேபோரனஹள்ளி கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியிலும் காட்டுத்தீ ஏற்பட்டது. வனத்துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் விரைந்து சென்று காட்டுத்தீயை அணைத்தனர். வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதால் அதனை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

=======

Tags:    

மேலும் செய்திகள்