ரூ.5 பணத்திற்காக... கார் ஓட்டுநர், பெண்ணுக்கு இடையே கடும் வாக்குவாதம்; நெட்டிசன்கள் விளாசல்

ரூ.5 பணத்திற்காக இருவரும் இந்தளவுக்கு சண்டையிட்டு கொள்ள கூடாது என நெட்டிசன்களில் ஒருவர் கூறியுள்ளார்.

Update: 2023-12-11 11:28 GMT

புதுடெல்லி,

ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு மக்கள் செல்வதற்கு பல்வேறு வாகன வசதிகள் உள்ளன. தற்போது, ஆன்லைன் உதவியால் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி தேவையான இடத்திற்கு செல்வதற்கான எளிய வழிமுறைகள் பெருகி விட்டன.

இந்த சூழலில், பெண் ஒருவர் வாடகை கார் ஒன்றில் செல்லும்போது, ஓட்டுநருக்கும் அவருக்கும் இடையே ரூ.5 பணத்திற்காக நடைபெறும் வாக்குவாதம் வீடியோவாக வெளிவந்து வைரலாகி வருகிறது.

வீடியோவில், அந்த பெண் தேர்ந்தெடுத்த இடத்திற்கு செல்ல வேண்டுமெனில் ரூ.100 கட்டணம் வேண்டும் என ஓட்டுநர் கேட்கிறார். அதற்கு அந்த பெண், தனது உறுதி செய்யப்பட்ட பயணத்திற்கு ரூ.95 கட்டணம் செலுத்தினால் போதும் என தனக்கு காட்டப்பட்டது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அந்த பெண் வீடியோ எடுத்திருக்கிறார். இதனை வாகன ஓட்டுநர் கவனித்ததும் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. ஓட்டுநர் குரலை உயர்த்தி பேசுகிறார்.

குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விடுவதற்கு தனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை என ஓட்டுநர் கூற, தேர்ந்தெடுத்த இடத்தில் இறக்கி விடும்படி அந்த பெண் வலியுறுத்துகிறார். சரியான இடம் எது என தெளிவுப்படுத்தும்படி ஓட்டுநர் பலமுறை வலியுறுத்த, வாக்குவாதம் தொடர்கிறது.

இந்த வாக்குவாதத்தில், கார் கூடுதலாக சென்றால், நீங்கள் கூடுதல் பணம் அளிக்க வேண்டும் என ஓட்டுநர் தொடர்ந்து கூறுவது கேட்கிறது. ஆனால், இதனால் அந்த பெண் அமைதியடையவில்லை. தொடர்ந்து உரையாடல் நீள்கிறது. எனினும், இறங்க வேண்டிய இடத்தில் பெண்ணை ஓட்டுநர் இறக்கி விட்டுள்ளார்.

அந்த வாகன ஓட்டுநர் பணியாற்ற கூடிய இன்டிரைவர் என்ற நிறுவனம், சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என தெரிவித்துள்ளது. இதுபற்றி தனிப்பட்ட முறையில் தங்களிடம் தெரிவிக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதும் 23 லட்சம் பேர் அதனை பார்வையிட்டு உள்ளனர். 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

நெட்டிசன்கள் இரு தரப்புக்கும் ஆதரவாக விமர்சனங்களை வெளியிட்டனர். குறைந்த அளவு பணத்திற்காக பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தி கொள்வது என்பது சரியல்ல என ஒருவரும், கார் ஒன்றும் தண்ணீரில் ஓடவில்லை. பெண் சார்பில் சாயாமல் இருங்கள். ஓட்டுநருக்கும் வாழ்க்கை உள்ளது.

அந்த பெண் கூறும் கட்டண தொகை வருத்தம் ஏற்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் சில தருணங்களில் இறக்கி விட வேண்டிய சரியான இடம் பற்றிய தகவலை அளிப்பதில்லை என மற்றொருவரும் தெரிவித்துள்ளனர். ரூ.5 பணத்திற்காக இருவரும் இந்தளவுக்கு சண்டையிட்டு கொள்ள கூடாது என வேறொருவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்