பயணிகளின் வசதிக்காக பெங்களூரு விமான நிலையத்தில் புதிய உயர் நடைபாதை திறப்பு
பயணிகளின் வசதிக்காக பெங்களூரு விமான நிலையத்தில் புதிய உயர் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு-
பயணிகளின் வசதிக்காக பெங்களூரு விமான நிலையத்தில் புதிய உயர் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு விமான நிலையம்
பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் 2 முனையங்கள் உள்ளன. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளை கையாண்டு வருகிறது.
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக 1-வது முனையத்தில் இருந்து பி-4 வாகன நிறுத்தும் இடத்துக்கு புதிய உயர் நடைபாதை அமைக்கப்பட்டு வந்தது.
உயர் நடைபாதை
இந்த நிலையில் அந்த புதிய உயர் நடைபாதை பணிகள் நிறைவடைந்து தற்போது பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. 1-வது முனையத்தில் இருந்து பி-4 வாகன நிறுத்துமிடம் வரை 420 மீட்டர் தூரத்துக்கு இந்த புதிய உயர் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 1-வது முனையம் முதல் பி-4 வாகன நிறுத்துமிடம் வரை பயணிகளுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வேகமாகவும், எந்த இடையூறும் இன்றி 1-வது முனையத்துக்கு செல்ல முடியும்.
நவீன வடிவமைப்புகளுடன் பயணிகளை கவரும் வகையில் அந்த உயர் நடைபாதை உள்ளது. மேலும் லிப்ட், நகரும் படிகட்டு வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உயர் நடைபாதையில் இரவில் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை உறுதி செய்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.