மணிப்பூரில் போலீஸ் சீருடையுடன் ஆயுதங்கள் கொண்டு சென்ற 5 பேர் கைது

மணிப்பூரில் போலீஸ் போல உடை அணிந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-18 23:50 GMT

கோப்புப்படம்

இம்பால்,

மணிப்பூர் கடந்த மே 3-ந்தேதி முதல் கலவர பூமியாக விளங்கி வருகிறது. மெய்தி-குகி இன மக்களின் மோதல் கலவரமாக வெடித்ததில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியான பிறகு மேலும் பதற்றம் அதிகரித்தது. அவ்வப்போது துப்பாக்கிச் சூடு, தீவைப்பு சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், போலீஸ் சோதனையின்போது, போலீஸ் போல உடை அணிந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்ற 5 பேர் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஆயுதம் வைத்திருத்தல், போலீஸ் சீருடையை தவறாக பயன்படுத்துதல், மிரட்டல், பணம் பறித்தல் போன்ற பிரிவு களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஏராளமானவர்கள், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள போராம்பட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். இதில் சிலர் லேசான காயம் அடைந்தனர்.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட, தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்