அரசு ஊழியர்கள் அரசுமுறை பயணத்தின் போது செலவுகளை குறைக்க நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்

நிதிச் செலவுகள் அதிகமாக இருப்பதால், தேவையற்ற செலவினங்களைக் குறைக்க நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2022-06-19 09:41 GMT

புதுடெல்லி,

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு, சில பொருட்களுக்கான சுங்க வரி குறைப்பு, அதிக உர மானியம் மற்றும் ஏழைகளுக்கு இலவச உணவு திட்டம் ஆகியவற்றின் காரணமாக நிதி செலவுகள் ஏற்கனவே அதிகமாக உள்ளது.

இப்போதைய சூழலில், நிதிச் செலவுகள் அதிகமாக இருப்பதால், தேவையற்ற செலவினங்களைக் குறைக்க நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, செலவினத் துறையின் அலுவலக குறிப்பாணை ஒன்று அரசு அலுவலகங்களுக்கு வெளியிடப்படுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மலிவான கட்டணத்தை தேர்வு செய்யுமாறு அரசு ஊழியர்களை நிதி அமைச்சகம் கேட்டுக் கொள்கிறது. அரசு ஊழியர்கள் தங்கள் பயணத் தேதிக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதன்மூலம், தேவையற்ற செலவுகளை குறைக்கலாம்.

பயணத் திட்டம் ஆலோசனையில் ஒப்புதல் பெறும் நிலையில் இருந்தாலும் முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ளுமாறும், தேவையின்றி டிக்கெட்டுகளை ரத்து செய்வதை தவிர்க்கவும் ஊழியர்களை நிதி அமைச்சகம் கேட்டுக் கொள்கிறது.

உத்தேசித்த பயணத்தின் 72 மணி நேரத்திற்குள் செய்யப்படும் எந்தவொரு முன்பதிவுக்கும் அல்லது பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கும் குறைவாக டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டால், பணியாளர்கள் சுயமாக எழுத்துப்பூர்வ காரணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள், தற்போது மூன்று அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களிடமிருந்து மட்டுமே விமான டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். அவை பால்மர் லாரி & கோ, அசோக் டிராவல் & டூர்ஸ் மற்றும் ஐஆர்சிடிசி.

அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட்டுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயண முகவர் மூலமாக மட்டுமே செய்யப்பட வேண்டும். மேலும், இந்த முன்பதிவு முகவர்களிடம் கட்டணம் எதுவும் செலுத்தப்படக்கூடாது. முடிந்தவரை ஆன்லைன் முன்பதிவு இணையதளம் மூலம் டிஜிட்டல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஊழியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிறப்புத் தேவைகள் அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும், மாற்று விமானங்களுக்கு அதிகபட்சம் இரண்டு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு பணியாளர்கள் சுயமாக எழுத்துப்பூர்வ காரணத்தை சமர்ப்பிக்க வேண்டும். வேறு காரணங்களுக்காக, ஒரே பயணத்திற்கு வெவ்வேறு விமானங்களில் ஒரு டிக்கெட்டுக்கு மேல் முன்பதிவு செய்யக்கூடாது.

மேலும், பயணத்தை முடித்த 30 நாட்களுக்குள் பயண முகவர்களுக்கான நிலுவைத் தொகையை செலுத்துமாறு அனைத்து அமைச்சகங்களையும் துறைகளையும், செலவினத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 31, 2022க்குள் பயண முகவர்களுக்கான அனைத்து முந்தைய நிலுவைத் தொகைகளையும் அமைச்சகங்கள் செலுத்த வேண்டும்.

அதிகாரிகள், தஙக்ள் பயணத்தின் 72 மணி நேரத்திற்குள் தங்கள் பயணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழை / உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும். அரசாங்கக் கணக்குகளில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள கூடாது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்