நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் வருமா..?

நாடாளுமன்றத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

Update: 2024-07-22 23:20 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நடப்பு 2024-25-ம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தற்போது தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர்.அதன்படி 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

இந்நிலையில் இந்த கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும். பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

குறிப்பாக, வளர்ந்த இந்தியா என்ற இலக்கில் செயல்பட்டு வரும் மத்திய அரசு, அதற்கான திட்டங்களை பட்ஜெட்டில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதை உறுதி செய்வதுபோல பிரதமர் மோடியும், இதை அமிர்த காலத்தின் முக்கியமான பட்ஜெட் என குறிப்பிட்டு உள்ளார்.

மக்கள் எதிர்பார்ப்பு

அதேநேரம் இந்த பட்ஜெட் மீது மக்களிடமும் பல்வேறு எதிர்பார்பார்ப்புகள் காணப்படுகிறது. குறிப்பாக, வருமான வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் விலைவாசியை கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதைப்போல வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி விடுவித்தல், ஒப்புதல் வழங்குதல், நிதி ஒதுக்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநில அரசுகளும் எதிர்பார்த்து இருக்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளை மத்திய பட்ஜெட் நிறைவேற்றுமா? என்பது இன்று தெரிந்து விடும்.

இதற்கிடையே மக்களவை அலுவல் ஆய்வுக்குழு நேற்று கூடி பட்ஜெட் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதித்தது. இதில் பட்ஜெட் விவாதத்துக்கு 20 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. மேலும் ரெயில்வே, கல்வி, சுகாதாரம், சிறு-குறு-நடுத்தர தொழில்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதேநேரம் மேலும் சில விவகாரங்கள் குறித்தும் நடப்பு தொடரில் விவாதிக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்