தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக மீண்டும் பரூக் அப்துல்லா நியமனம்
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக மீண்டும் பரூக் அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீர்,
காஷ்மீரில், செல்வாக்கான அரசியல் கட்சிகளில் தேசிய மாநாட்டு கட்சி முக்கியமானது. பலமுறை காஷ்மீரில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி., முதல்-மந்திரியாக இருந்துள்ளார்.
பரூக் அப்துல்லா 1983-ம் ஆண்டில் இருந்து தேசிய மாநாட்டு கட்சி தலைவராக உள்ளார். தற்போது 85 வயதான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக அண்மையில் அறிவித்தார்.
பரூக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா, தற்போது தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவராக இருக்கிறார். பரூக் அப்துல்லாவை தொடர்ந்து உமர் அப்துல்லா கட்சி தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக மீண்டும் பரூக் அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவியைவிட்டு விலகுவதாக பரூக் அப்துல்லா அறிவித்த நிலையில் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை பரூக் அப்துல்லாவிற்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை எனவும் பரூக் அப்துல்லாவுக்கு ஆதரவாக காஷ்மீரில் இருந்து 183 பரிந்துரைகளும், ஜம்முவில் இருந்து 396 பரிந்துரைகளும், லடாக்கிலிருந்து 25 பரிந்துரைகளும் பெறப்பட்டதாக சாகர் கூறினார்.