டெல்லியில் மீண்டும் தொடங்கிய விவசாயிகள் போராட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...!
வேலையில்லா திண்டாட்டத்தை கண்டித்து டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்த போராட்டத்துக்கு வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாதான் அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் ஆக்கிரமித்து இருந்ததால், இந்த போராட்டத்தை தீவிரமாக ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை அடையும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடியுள்ளனர். அத்துடன் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசாரை எல்லைகளில் காவலுக்கு நிறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வேலையில்லா திண்டாட்டத்தை கண்டித்து விவசாயிகளின் போராட்டம் தொடங்கி உள்ளது. அதிக அளவில் விவசாயிகள் கூடுவதை தடுக்க சிங்கு, காஜிபூர் உள்ளிட்ட டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியின் எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதால் நொய்டா-டெல்லி எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டள்ளது. மேலும், தலைநகர் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.