குடகில் விளை நிலங்கள் வறண்டது இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
குடகில் விளை நிலங்கள் வறண்டது இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குடகு:-
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதையடுத்து ஜூலை மாதத்தில் நல்ல மழை பெய்தது. இதனால் குளங்கள், ஏரிகள், அணைகள், நிரம்ப தொடங்கியது. பின்னர் மீண்டும் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து இல்லாமல் நீரின் அளவு குறைய தொடங்கிவிட்டது.
மேலும் விவசாய நிலங்களிலும் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. ஒரு சில இடங்களில் கிணறுகள் நீர் இல்லாமல் வறண்டு கிடப்பதாக கூறப்படுகிறது.இதனால் விளை நிலங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி நெற்பயிர்கள் வெயிலால் வாடிவிட்டது. மேலும் காபி, மிளகு, வாழை, ஏலக்காய் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகுவதுடன், விவசாய நிலங்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பயிர்களை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் விவசாயிகள் வாடகைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கூடுதல் பணம் செலவாகுவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். எனவே குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும். நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு மாநில அரசு இழப்பீடு தொகை வழங்கவேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.