மந்திரி சோமண்ணாவை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் மந்திரி சோமண்ணாவை கண்டித்து சாம்ராஜ்நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-24 18:45 GMT

கொள்ளேகால்:

விவசாயிகள், பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹங்கலாவில் நேற்றுமுன்தினம் மாலை நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில வீட்டு வசதித்துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான வி.சோமண்ணா, கூட்டத்தில் கலந்து கொண்ட கெம்பம்மா என்ற பெண்ணை கன்னத்தில் அறைந்ததாக கூறுப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மந்திரி சோமண்ணாவின் நடவடிக்கைக்கு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று மந்திரி சோமண்ணாவை கண்டித்து சாம்ராஜ்நகர் நகரில் உள்ள புவனேஸ்வரி சர்க்கிள் பகுதியில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

அப்போது மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ஹென்னூர் பிரகாஷ் கூறியதாவது:- செல்வாக்கு மிக்க மந்திரி சோமண்ணா, பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்யவேண்டும். மேலும் நீதி விசாரணை நடத்தவேண்டும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரி சோமண்ணாவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக புதிய மந்திரியை நியமிக்கவேண்டும். இல்லையென்றால் மாநிலம் முழுவதும் கடும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து அவர்கள், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினியிடம் புகார் மனு ஒன்றையும் வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்