திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவைக்கு போலி டிக்கெட்: ரூ.48 ஆயிரம் மோசடி செய்த இடைத்தரகர்களுக்கு வலைவீச்சு

திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவைக்கு போலி டிக்கெட் கொடுத்து ரூ.48 ஆயிரம் மோசடி செய்த இடைத்தரகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-12-18 23:06 GMT

கோப்புப்படம்

திருமலை,

ஆந்திர மாநிலம் குடிவாடா, நெல்லூரைச் சேர்ந்த பக்தர்கள் 2 பேர் நேற்று முன்தினம் காலை திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வைத்திருந்த டிக்கெட்டுகளை தேவஸ்தான ஊழியர்கள் வாங்கி பரிசீலனை செய்தனர்.

அவர்கள் வைத்திருந்தது பழைய சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளின் பெயர்களை திருத்தி வழங்கப்பட்ட போலி டிக்கெட்டுகள் என தெரிய வந்தது. அந்த போலி டிக்கெட்டுகளை திருப்பதியைச் சேர்ந்த இடைத்தரகர்களான சைதன்யா, சுரேஷ் கொடுத்ததாகவும், அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி நடக்க உள்ள வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறி ஆக மொத்தம் ரூ.48 ஆயிரம் தங்களிடம் இருந்து வாங்கி கொண்டதாகவும் கூறினர். அத்துடன் 2 விடுதி அறைகளுக்காக இடைத்தரகர்கள் ரூ.1,200 பெற்றுக்கொண்டதும் தெரிய வந்தது.

தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த பக்தர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இடைத்தரகர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்