தேர்வில் தோல்வி.. ஏரியில் குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
மாணவனை தேடிய போது அவர் ஏரியில் பிணமாக மிதப்பது தெரியவந்தது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா ஜிகினி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் விஜய்சங்கர். இவரது மகன் அம்ருதேஷ்(வயது 21). இவர்களது சொந்த ஊர் பீகார் ஆகும். பல ஆண்டுகளாக விஜய்சங்கர் குடும்பத்துடன் ஜிகனியில் வசித்து வருகிறார்.
பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் அம்ருதேஷ் என்ஜினீயரிங் படித்து வந்தார். விடுதியில் தங்கி இருந்து அவர் கல்லூரிக்கு சென்றார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜிகினி ஏரியில் குதித்து அம்ருதேஷ் தற்கொலை செய்து கொண்டார். மகனை காணவில்லை என்று விஜய்சங்கர் தேடிய போது தான் அம்ருதேஷ் ஏரியில் பிணமாக மிதப்பது தெரியவந்தது.
இதுபற்றி அறிந்ததும் ஜிகினி போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் அவர் தோல்வி அடைந்திருந்தார். தேர்வில் தோல்வி அடைந்ததாலும், தந்தைக்கு பயந்தும் அவர் தற்கொலை முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.