கட்டணம் செலுத்துவதில் தகராறு: சுங்கச்சாவடி ஊழியர் ஆக்கி மட்டையால் அடித்துக்கொலை

சுங்க கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சுங்கச்சாவடி ஊழியர் ஆக்கி மட்டையால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-06-05 22:24 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகா கரிகல் கிராமத்தை சேர்ந்தவர் பவன்குமார்(வயது 26). இவர், பெங்களூரு-மைசூரு இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் பவன்குமார் வழக்கம் போல் சுங்கச்சாவடியில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது, மைசூருவில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரில் சில இளைஞர்கள் பயணித்தனர். சுங்கச்சாவடிக்கு கார் வந்தபோது சுங்க கட்டணம் கொடுக்கும்படி கார் டிரைவரிடம் பவன்குமார் கேட்டுள்ளார்.

அப்போது, சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பாக பவன்குமாருக்கும் காரில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பவன்குமார் உள்பட சுங்க ஊழியர்களும், காரில் இருந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பவன்குமார் உள்பட பிற ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், கட்டணத்தை கொடுத்துவிட்டு சுங்கச்சாவடியிலிருந்து காரில் வந்த இளைஞர்கள் புறப்பட்டு சென்றனர். நள்ளிரவு 12.30 மணியளவில் சுங்கச்சாவடி அருகே பவன்குமார் சாப்பிடுவதற்காக சென்றார்.

அந்த சந்தர்ப்பத்தில் பவன்குமாரை பின்தொடர்ந்து இளைஞர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று பவன்குமாரை சுற்றி வளைத்து அடித்து, உதைத்து தாக்கினார்கள். அத்துடன் தங்களிடம் இருந்த ஆக்கி மட்டையால் பவன்குமாரை கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆக்கி மட்டையால் அடித்து சுங்க ஊழியர் பவன்குமாரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்