வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த முன்னாள் கவுன்சிலர் கைது
மைசூருவில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.;
மைசூரு
வீட்டுமனை
மைசூரு டவுன் போகாதி பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராஜு (வயது 40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். வெங்கட்ராஜு அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்தநிலையில், அவர் புதியதாக வீட்டுமனை வாங்க முடிவு செய்தார்.
அதற்காக அவரது நண்பர் தினேசை அணுகினார். அவர் மைசூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சோமசுந்தரை வெங்கட்ராஜுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது தான் மூடா வளர்ச்சி வாரியத்தில் தலைவராக உள்ளதாகவும், மூடா வளர்ச்சி வாரியத்திற்கு சொந்தமாக லே- அவுட்டுகள் (வீட்டுமனைகள்) உள்ளதாகவும் சோமசுந்தர் கூறினார்.
இதனை வெங்கட்ராஜு, தினேஷ் ஆகியோர் நம்பினர். இதையடுத்து ஆனந்தநகர் லே-அவுட்டுக்கு சோமசுந்தர், அவர்கள் 2 பேரையும் அழைத்து சென்றார்.
புகைப்படம் எடுத்து கொண்டார்
அப்போது மூடாவிற்கு சொந்தமான நிலம் முன்பு வெங்கட்ராஜுவை அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். குறைந்த வீட்டு மனைகளே உள்ளன.
எனவே தற்போதே வீட்டுமனை வாங்கி கொள்ளுங்கள். அதற்கு ரூ. 12 லட்சம் செலவு ஆகும் என சோமசுந்தர் கூறினார். இதையடுத்து பல்வேறு தவணைகளாக வெங்கட்ராஜு ரூ. 12 லட்சத்தை சோமசுந்தரிடம் கொடுத்தார்.
பின்னர் சில நாட்கள் கழித்து வெங்கட்ராஜுவிடம் வீட்டுமனைக்கு மாநகராட்சி சொத்து வரி, மூடா வரி செலுத்தி உள்ளேன் என சோமசுந்தர் போலீ ரசீதுகளை கொடுத்துள்ளார். இதையடுத்து வெங்கட்ராஜு அவரிடம் நிலபட்டா வழங்குபடி கூறியுள்ளார். ஆனால் சோமசுந்தர் காலதாமதம் செய்து வந்தார்.
ஏமாற்றம் அடைந்தார்
இதனால் சந்தேகம் அடைந்த வெங்கட்ராஜு மாநகராட்சி, மூடா அலுவலகத்திற்கு சென்று வீட்டுமனை குறித்து விசாரித்தார். அப்போது தான் ஏமாற்றம் அடைந்தது வெங்கட்ராஜுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் சோமசுந்தரிடம் சென்று பணத்தை திரும்ப தரும்படி கூறினார். அப்போது அவர் மைசூருவில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வரும்படி கூறினார்.
இதையடுத்து வெங்கட்ராஜு தனது நண்பர் தினேசுடன் ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தினேஷ், வெங்கட்ராஜு ஆகியோரை சரமாரியாக தாக்கினார். மேலும் அவர்களுக்கு விஜயகுமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து, வெங்கட்ராஜு லட்சுமிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சோமசுந்தரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.