"அமித் ஷாவின் புரட்சிகரமான அறிவிப்பை எல்லோரும் வரவேற்கிறோம்" ப.சிதம்பரம் டுவீட்
தமிழரை நாட்டின் பிரதமராக ஆக்குவோம் என்று உள்துறை மந்திரி அமித் ஷாவின் புரட்சிகரமான அறிவிப்பை எல்லோரும் வரவேற்கிறோம் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு இரண்டு முறை வந்தது. அதனை கெடுத்தது திமுகதான்.. ஆனால், தமிழகத்திலிருந்து ஒரு பிரதமரை பாஜக உருவாக்கும் என்று சொல்லியிருக்கிறார் அமித்ஷா. அமித்ஷாவின் இந்த பேச்சுதான் தமிழக தமிழகத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது ஆனால் அதன் உள்நோக்கம் புரியவில்லை என்றார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில்,
தமிழரை நாட்டின் பிரதமராக ஆக்குவோம் என்று உள்துறை மந்திரி திரு அமித் ஷா அறிவித்திருக்கிறார். இந்த புரட்சிகரமான அறிவிப்பை எல்லோரும் வரவேற்கிறோம். 2024ஆம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழரைப் பிரதமராக ஆக்குவோம் என்று அவர் சொல்லியிருக்கிறார் என்றே நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
திமுக எம்.பி., கனிமொழி டுவிட்டர் பதிவில்,
தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.