அடிமட்ட அளவில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசின் நிதியை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும் - மந்திரி மன்சுக் மாண்டவியா
மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று கலந்துரையாடினார்.
புதுடெல்லி,
மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று கலந்துரையாடினார்.
இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி உட்பட பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், 15ஆவது நிதி ஆணைய மானியங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து, ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா கொரோனா தடுப்பூசி இயக்கம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
"நாடு முழுவதும் பல அடுக்கு சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கி, விரிவுபடுத்தி, வலுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கூட்டுறவு ஒத்துழைப்பு உணர்வுடன், மத்திய அரசு பணியாற்றி வருகிறது.
கொரோனா பெருந்தொற்று நமக்கு சுகாதார உள்கட்டமைப்பை ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் வலுப்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துள்ளது.
மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
அடிமட்டத்தில் மக்களை மையப்படுத்தும் சுகாதார சேவைகளை செயல்படுத்துவதையும் வட்டார அளவில் தொடங்கி சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் விரைவுபடுத்த மத்திய நிதியை உரிய நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.
மத்திய அரசு நிதியை, சில மாநிலங்கள் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பது குறித்து கவலையளிக்கிறது. இத்தகையை மாநிலங்களை மத்திய அரசு ஆய்வு செய்து நிதியை அதிகளவில் பயன்படுத்த வலியுறுத்தும்.
18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.