அமலாக்கத்துறை சம்மன் தொடர்பான வழக்கு: கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிப்பு

தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிடுமாறு ஐகோர்ட்டில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கோரிக்கை வைத்திருந்தார்.

Update: 2024-03-21 11:25 GMT

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 8 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.

இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கில் மார்ச் 16-ம் தேதி ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 16ம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடைவிதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். அதில், விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை எதுவும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்றும், தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டேன் என ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, கட்டாய நடவடிக்கையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பாதுகாப்பை வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துள்ளது. மேலும், தற்போதைய சூழலில் தங்களால் எந்த உத்தரவையும் வழங்க முடியாது என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டு, வழக்கை அடுத்த மாதம் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

 

Tags:    

மேலும் செய்திகள்