2023-ம் ஆண்டில் தேசிய கட்சியாக உருவெடுப்போம்: ஐக்கிய ஜனதா தளம்
2023-ம் ஆண்டில் தேசிய கட்சியாக நாங்கள் உருவெடுப்போம் என ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் லல்லன் சிங் இன்று கூறியுள்ளார்.
பாட்னா,
மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இதுபற்றி ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் லல்லன் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, மணிப்பூரில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது.
பணபலத்தினால், எம்.எல்.ஏ.க்களை தங்களுடன் இணைத்து கொள்ளும் செயல்களில் ஈடுபடுகின்றனர். பிரதமருக்கு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதே ஊழல்தான். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும். 2023-ம் ஆண்டில் தேசிய கட்சியாக நாங்கள் உருவெடுப்போம் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், ஊழல் மற்றும் நேர்மைக்கான விளக்கம் பிரதமர் மோடியால் மாற்றப்படுகிறது. ஊழல் செய்த நபர் பா.ஜ.க.வில் இணைந்து விட்டால், பின்னர் அவர் தூய்மையானவர் ஆகி விடுவார். பிரதமரால் பணபலம் பயன்படுத்தப்படும்போது, அது நேர்மையான ஒன்று. எதிர்க்கட்சிகள் அந்த தளத்திற்கு வரும்போது, பின்னர் அது ஊழல் என்றாகி விடும் என லல்லன் கூறியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் 10-வது பிரிவின் கீழ், மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இதனை மணிப்பூர் சட்டசபை செயலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
லல்லன் கூறும்போது, அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மணிப்பூரில் பா.ஜ.க.வை வீழ்த்தி ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். எங்களை தடுத்து நிறுத்த எவ்வளவு போராடினாலும் கவலையில்லை. 2023-ம் ஆண்டில் நாங்கள் தேசிய கட்சியாக உருவெடுப்போம் என அவர் கூறியுள்ளார்.