காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேர்மையாக நடைபெறும் - மதுசூதன் மிஸ்த்ரி உறுதி
காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி உறுதியளித்து உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்களிப்போரின் பட்டியலை வெளியிட வேண்டும் என சசிதரூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர். மேலும் தேர்தலில் வெளிப்படைத்தன்மை குறித்தும் கவலை வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோருக்கு வருகிற 20-ந்தேதி முதல் அந்த பட்டியல் வழங்கப்படும் என கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி உறுதியளித்து உள்ளார்.
டெல்லி தலைமை அலுவலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து அதை பெற்றுக்கொள்ளலாம் என மேற்படி தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இதை சசிதரூர், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.