பெங்களூருவில் பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் ஊர்வலம்
பெங்களூருவில் பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தினார்.
பெங்களுரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. கடந்த 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை பிரதமர் மோடி 3 நாட்கள் கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் செய்தார். இதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நகரில் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தினார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பெங்களூருவில் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தினார்.
பெங்களூரு சிக்பேட்டை, கோவிந்தராஜ்நகர், விஜயநகர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுகிலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் திரண்டு நின்று பிரியங்கா காந்தியை வரவேற்றனர். அவரும், பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்ததுடன் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி ஆதரவு திரட்டினார்.