ஒலி பெருக்கி

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துகளளை இங்கு காண்போம்.

Update: 2023-05-08 18:45 GMT

பெங்களூரு:

பா.ஜனதாவின் வளர்ச்சிக்கும், காங்கிரசின் பிரிவினைக்கும் தேர்தல்

இந்த முறை சட்டசபை தேர்தலை பொறுத்தவரை மக்களே தாமாக முன்வந்து எங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்கள். நான் பிரசாரம் மேற்கொண்ட போது தாய்மார்களும், மக்களும் ஆதரவு வழங்கினர். நான் பிறந்ததை பாக்கியமாக கருதுகிறேன். பா.ஜனதாவின் வளர்ச்சிக்கும், காங்கிரசின் பிரிவினைக்கும் இந்த தேர்தல் நடக்கிறது.

-பசவராஜ்பொம்மை, முதல்-மந்திரி.


13-ந்தேதி காங்கிரசை ஆஞ்சநேயர் தாக்குவதை பாருங்கள்

பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக கூறியுள்ள காங்கிரஸ் அதனை வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரசை கண்டித்து அனுமன் மந்திரம் பாடும் நிகழ்வில் நான் கலந்துகொள்கிறேன். காங்கிரஸ் கட்சி ரிவர்ஸ் கீயரில் பின்னோக்கி செல்கிறது. இந்த தேர்தலில் அக்கட்சி தலைகீழாக மாறும். வருகிற 13-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை அன்று காங்கிரசை ஆஞ்சநேயர் எவ்வாறு தாக்குகிறார் என்பதை பாருங்கள்.

- பகவந்த் கூபா, பா.ஜனதா எம்.பி.


இதுவே எனது கடைசி தேர்தல்; அரசியலில் இருப்பேன்

நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது நல்ல முடிவு என மக்கள் கூறி வருகிறார்கள். இதுவே எனது கடைசி தேர்தல். 70 வயதாகிவிட்டதால் இனி தேர்தலில் களமிறங்கமாட்டேன். ஆனால் அரசியலில் இருந்து விலகமாட்டேன். அரசியலில் எனது உயிர் இருக்கும் வரை இருப்பேன். எனக்கு மக்கள் நல்ல ஆதரவு அளித்து வருகிறார்கள். கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

- ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் வேட்பாளர்.


கர்நாடகத்தில் 15-ந்தேதி காங்கிரஸ் ஆட்சி உதயமாகும்

விரைவில் கர்நாடகத்தில் நல்லாட்சி அமைய போகிறது. விவசாயிகளுக்காக ஏரிகளில் நீரை நிரப்புவோம். மத்திய அரசின் திட்டங்களை காங்கிரஸ் நிறுத்திவிடும் என்கிறார்கள். நாங்கள் யாருடைய மிரட்டலுக்கும் பயப்படமாட்டோம். காங்கிரஸ் கட்சி இந்த முறை 141 இடங்களில் வெற்றி பெறும். வருகிற 15-ந்தேதி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி உதயமாகும். நாங்கள் அறிவித்த 5 முக்கிய உத்தரவாதங்களை முதல் நாளிலேயே அமல்படுத்துவோம். -

டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் மாநில தலைவர்.


காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல்

காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். கடந்த முறை ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியும் உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்தனர். அங்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதுபோல் கர்நாடக தேர்தலை முன்னிட்டும் அவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். உத்தரபிரதேச முடிவே இங்கும் வரும். காங்கிரஸ் கட்சிக்கு திறமையான தலைவர்கள் இல்லை. பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு சரிசமமான தலைவர்கள் காங்கிரசில் இல்லை.

- எடியூரப்பா, பா.ஜனதா மூத்த தலைவர். 

Tags:    

மேலும் செய்திகள்